அ.யாழினி பர்வதம், சென்னை-78

சிறையிலிருந்து வந்து அரசியல் செய்கிற சசிகலாவுக்கும் லாலு பிரசாத் யாதவ்வுக்கும் என்ன வித்தியாசம்?

Advertisment

லாலுபிரசாத் யாதவ் தன் கட்சி யார் கையில் இருக்கிறது, எப்படி இருக்கிறது என்பதை அறிந்து அரசியல் செய்கிறார். சசிகலா, தான் எந்தக் கட்சியில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதற்காக அரசியல் செய்கிறார்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு, சென்னை-110

இந்தியாவை முதன்மை மாநிலமாக்க தொழில்துறையில் அ.தி.மு.க. ஏற்படுத்திக் கொடுத்த அடித்தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தி.மு.க அரசுக்கு எடப்பாடி பழனிசாமி யோசனை தெரிவித்துள்ளாரே?

முந்தைய அரசின் சிறப்பான திட்டங் களைத் தொடர் வது என்பது ஆரோக்கியமான நடைமுறைதான். தி.மு.க. ஆட்சியில் கலைஞரால் தொடங்கி வைக்கப் பட்ட கார் கம்பெனி தனது வெள்ளி விழாவான 25-ஆம் ஆண்டை, மீண்டும் தி.மு.க. ஆட்சியை அமைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைத்துக் கொண்டாடுகிறது. இதுதான் தொழில்துறைக்கான அடித்தளம். ஜெயலலிதா ஆட்சியில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டதாக அறிவிக்கப்பட் டது. எடப்பாடியும் முதலீட்டாளர் மாநாடு நடத்தினார். வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளைக் கோரினார். அதன் விளைவு என்ன? எத்தனை தொழிற்சாலைகள் உருவாகின? எத்தனை தமிழர்கள் வேலை பெற்றனர்? என்ற விவரங்களை எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கவேண்டும். அது சரியான அடித்தளமாக இருந்தால், இன்றைய அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், மு.க.ஸ்டாலின் போட்டுள்ள புதிய அடித்தளம்தான் தமிழ்நாட்டுக்குப் பயன் தரும்.

த.சிவாஜிமூக்கையா, சென்னை-44

அரசியல் மாமூல் -ரவுடி மாமூல் -போலீஸ் மாமூல் என்ன வித்தியாசம்?

Advertisment

அரசியல் மாமூல், ஆட்சிக்கேற்றபடி மாறும். ரவுடி மாமூல், தாதாதனத்திற்கேற்றபடி மாறும். போலீஸ் மாமூல், ஸ்டேஷனுக்கேற்றபடி மாறும். மாமூல் என்ற வழக்கம் மட்டும் மாறவே மாறாது.

மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை

"நீட் தேர்வு விவகாரத்தில் நல்ல முடிவு வரும்' என எதிர்பார்த்து வாக்களித்தவர்களை சமாதானப் படுத்தி, சால்ஜாப்பு சொல்கிறதா அரசு?

ஒற்றை உத்தரவில் நீட்டை நீக்க முடியாது. சட்டப் போராட்டம்தான் தீர்வு தரும். அதை தற்போதைய அரசு மேற்கொண்டிருக்கிறது. எனினும், அந்தப் போராட்டத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாடு, நீதிமன்றங்களின் பார்வை இவற்றைப் பொறுத்தே உத்தரவுகளும் இறுதி முடிவுகளும் வரும். இந்த உண்மையை நாம் உணராதவரை சமாதானப் படலம் தொடரும்.

Advertisment

mm

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

இதுவரை ஜனாதிபதியாக இருந்தவர்களில் மாவலியைக் கவர்ந்தவர் யார்?

ஜனாதிபதிகள் பலவிதம். சனாதனக் கொள்கையில் பிடிப்புள்ளவராக இருந்தவர் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத். தனது பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடும் வகையில் செல்வாக்கு பெற்றவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது எந்த அணி வலிமையாக இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் ஜனாதிபதியானவர் வி.வி.கிரி. நாட்டில் எமர்ஜென்சி நிலையை அமல்படுத்துவதற்கு நள்ளிரவு தூக்கத்தில் கையெழுத்திட்ட ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது. தன்னைக் கட்சிதான் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியது என்றபோதும் அந்தக் கட்சித் தலைமை ஆட்சி பீடத்தில் இருந்த போதும் கவலைப் படாமல் கேள்வி எழுப்பிய ஜனாதி பதி ஜெயில்சிங். கவர்னரின் ஒப்புதலைப் பெறாமலேயே மாநில அரசைக் கலைத்து ஜனநாய கத்தை கேள்விக்குறி யாக்கிய தமிழகத்தைச் சேர்ந்த ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், அதே தமிழகத் தைச் சேர்ந்தவராக -அணு விஞ்ஞானியாக -மாணவர்களின் கனவு நாயகராக மக்களின் மதிப்பிற்குரியவராக விளங்கியவர் ஜனாதிபதி அப்துல்கலாம். நாட்டின் முதல் குடிமகன் என்பதுபோல முதல் குடிமகள் என்ற அங்கீகாரமும் உண்டு என்பதற்கான அடையாளம் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல். இவர்கள் எல்லாரையும்விட, சாதி ஆதிக்கம் மேலோங்கிய நாட்டில், பட்டியல் இன சமுதாயத்திலிருந்து முதல் ஜனாதிபதியாகி, அந்தப் பதவிக்குரிய அதிகார எல்லையை தன் செயல்பாடு கள் மூலம் உணரவைத்த கே.ஆர்.நாராயணன் ஜனாதிபதிகளில் ஜனநாயகக் காவலர்.

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை

டீக்கடையில் வேலை பார்க்கிறவர், களைப்பு தீர்வதற்காக மதுக்கடையை நாடிப் போகிறார். மதுக்கடையில் வேலை பார்க்கிறவர், டீக்கடையைத் தேடி வந்து களைப்பைப் போக்குகிறார். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது இதுதானா?

ஒருவருக்கு மதுவில் கிடைப்பது இன்னொரு வருக்கு தேநீரில் கிடைக்கிறது. சக்கரம் போல சுற்றும் வாழ்க்கையில் இக்கரை -அக்கரை எல்லாமும் ஒரே நிறம்தான். வாழ்வின் மீதும் நம்மை நம்பி வாழ்பவர் மீதும் உள்ள அக்கறைதான் என்றென்றும் பசுமையானது.